ஆஸ்திரேலிய வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி பார்த்து பார்த்து செய்தும்  கூட, கிரிக்கெட் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு வர மறுத்தது குறித்து அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநர் க்ரேம் ஸ்மித். 

ஆஸ்திரேலிய அணி மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு பயந்து தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டபடி மார்ச் மாதம் செல்ல மறுத்து ஒத்திவைத்துவிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்(கிரிக்கெட் ஆஸ்திரேலியா).

இந்த தொடரில் ஆடாதது ஆஸி., அணிக்கு பெரும் பாதிப்பு. ஏனெனில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் ஆஸி., அணி முதலிரண்டு இடங்களுக்குள் சென்றால் தான் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும். அதற்கு, இந்த தொடரே அந்த அணிக்கு கடைசி வாய்ப்பு. ஆனால் இந்த தொடரில் ஆட மறுத்ததால், ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது ஆஸி., அணி. 

ஆனால் அதை பற்றியெல்லாம் ஆஸி., கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை. ஆனால் ஆஸி., தென்னாப்பிரிக்கா செல்ல மறுத்தது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்குத்தான், மிகப்பெரிய அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வருத்தத்தை தெரிவித்த கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின்(தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்) இயக்குநர் க்ரேம் ஸ்மித், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா கடுமையாக உழைத்துவருகிறது. அப்படியிருக்கையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு பெரும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் உள்ளது என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.