உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர். 

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்த அணிகள் தான். 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், மற்ற அணிகளை விட இங்கிலாந்துக்குத்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அதே கருத்தை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். 

உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், 2015ம் ஆண்டு உலக கோப்பையில் படுமோசமாக வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பின்னர் அணியை சீரமைப்பு செய்து கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி மிகச்சிறந்த அணி மட்டுமல்லாமல் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இங்கிலாந்து அணி அண்மைக்காலத்தில் ஆடிய போட்டிகளை பார்த்தோமேயானால் அவர்கள் அபாரமாக ஆடுவது தெரியும். 2011 மற்றும் 2015 ஆகிய உலக கோப்பைகளை, தொடரை நடத்திய நாட்டின் அணிதான் வென்றது. அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரை இங்கிலாந்து வெல்வதற்குத்தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மற்ற அணிகளும் வலுவாகவே உள்ளன. எனினும் இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் வெல்லும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.