ஒருநாள் மற்றும் டி20 அணியிலிருந்து ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுவிட்ட அஷ்வின், டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவருகிறார். ஆனால் டெஸ்ட் அணியிலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக எடுக்கப்படுவதில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கூட புறக்கணிக்கப்பட்டிருந்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவான 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஷ்வின், பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருந்தும் கூட வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். 

வெளிநாடுகளில் அஷ்வின் இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் கிடையாது என்று அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் முதல் போட்டியில் அஷ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 27வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்தாவது முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 

அஷ்வின் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த கவாஸ்கர், அஷ்வின் கிரிக்கெட்டை கடந்து வேறு சில காரணங்களுக்காக ஓரங்கட்டப்படுவதாக கருதுகிறார். 

அஷ்வினுக்கும் கேப்டன் கோலிக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இல்லை. எனவே அதற்காக அஷ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்ற கருத்து பரவலாக இருந்துவருகிறது. இந்நிலையில், அஷ்வின் ஓரங்கட்டப்படுவது குறித்து பேசிய கவாஸ்கர், அணி நிர்வாகமும் மற்ற வீரர்களும் உறுதுணையாக இருந்தால்தான் ஒரு வீரருக்கு நம்பிக்கை இருக்கும். அது அஷ்வினுக்கு கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். அதனால்தான் அவரால் ஃப்ரீயாக இருக்க முடியவில்லை. அதனால்தான் அவர் சற்று திணறுவதுபோல் தெரிகிறது. தான் ஓரங்கட்டப்படுவதாக ஒரு வீரர் உணர்ந்தால், அவர் மிகவும் சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைப்பார். அதுவே ஒரு கஷ்டமான சூழல்தான். 

அஷ்வின் எப்போதுமே யாருடனாவது ஒப்பிடப்படுகிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, நாதன் லயன் சிறப்பாக வீசுகிறார் என்று அஷ்வினை ஏசினர். அதேபோல அதற்கு முந்தைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது மொயின் அலியுடன் ஒப்பிடப்பட்டார். 

கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை கடந்து வேறு ஏதோ காரணங்களுக்காக அவர் ஓரங்கட்டப்படுகிறார். நல்ல டெஸ்ட் ரெக்கார்டை வைத்திருந்தும், சுமார் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தும் கூட, அவர் ஓரங்கட்டப்படுகிறார் என்றால், அது அவரது பெர்ஃபாமென்சை மட்டும் பொறுத்து அமையவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.