கேகேஆர் அணியில் கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் சுனில் நரைனை எடுத்தே தீர வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் அடம்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் கேகேஆர் அணியும் ஒன்று. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இந்த 2 அணிகளுக்கு அடுத்தபடியாக அதிகமான முறை கோப்பையை வென்றது கவுதம் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி. 

கேகேஆர் அணி கம்பீரின் கேப்டன்சியில் 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் கம்பீரும் ஒருவர். ஆக்ரோஷமான கேப்டனான கம்பீர், சிறந்த கேப்டன்சி திறன் கொண்டவர்.

ஒரு கேப்டனாக கம்பீர் அவர் எடுக்கும் முடிவுகளில் எவ்வளவு திடமாக இருந்தார் என்பதை பறைசாற்றும் வகையிலான சம்பவம் ஒன்றை கேகேஆர் அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளர் விஜய் தாஹியா தெரிவித்துள்ளார். 

ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் தாஹியா, எனக்கு நனைவிருக்கிறது. 2012 ஐபிஎல் ஏலம் நடைபெற்ற சமயத்தில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார் கம்பீர். ஏலத்திற்கு முன் அங்கிருந்து ஃபோன் செய்து, என்ன செய்வீர்களோ தெரியாது.. ஆனால் என் அணிக்கு சுனில் நரைன் கண்டிப்பாக வேண்டும். அந்த மாதிரியான கேப்டன் தான் ஒரு அணிக்கு வேண்டும் என்று தனது முடிவில் திடமாக இருந்த கம்பீரை விஜய் தாஹியா பாராட்டியுள்ளார். 

2011ம் ஆண்டு கேகேஆர் அணியின் கேப்டனாக கம்பீர் நியமிக்கப்பட்டார். 2012 ஐபிஎல்லில் தான் சுனில் நரைனை கேகேஆர் அணி எடுத்தது. கம்பீரின் தேர்வு மிகச்சிறந்தது. சுனில் நரைன் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆரம்பத்தில் சில சீசன்களில் பவுலிங்கில் மட்டுமே ஜோலித்தார். ஆனால் கடந்த சில சீசன்களாக டாப் ஆர்டரில் இறங்குமளவுக்கு அவரது பேட்டிங் மேம்பட்டிருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் கேகேஆர் அணிக்கு சிறப்பான பங்களிப்பு செய்துவருகிறார் சுனில் நரைன். 

ஐபிஎல்லில் இதுவரை 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுனில் நரைன், ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார் சுனில் நரைன். 2013 ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 

சுனில் நரைனை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கம்பீர், தனது தேர்வும் முடிவும் சரிதான் என்பதை நிரூபித்து காட்டும் வகையில், 2012 ஐபிஎல் டைட்டிலை கேகேஆர் அணிக்கு வென்று கொடுத்து அசத்தினார்.