இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஒரு போட்டியில் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை; ஒயிட்வாஷ் ஆகிவிடும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடக்கவுள்ளன.

முதல் 2 டெஸ்ட் சென்னையில் நடக்கவுள்ளதால் சென்னைக்கு வந்த இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலுமே இலங்கையை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

இலங்கையை வீழ்த்திய அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்பதை அறிந்து, அதற்காக சரியான திட்டமிடலுடன் தீவிர பயிற்சி எடுத்துவருகிறது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவுதம் கம்பீர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 அல்லது 3-1 என வெல்லும். அந்த ஒரு வெற்றியும் கூட இங்கிலாந்துக்கு, பகலிரவு போட்டியில் கிடைப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பிருக்கிறதே தவிர, என்னை பொறுத்தமட்டில் இங்கிலாந்து அணியிடம் இப்போதிருக்கும் ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியை ஒரு போட்டியில் கூட வீழ்த்த முடியாது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: 

ஜோ ரூட்(கேப்டன்), ஆர்ச்சர், மொயின் அலி, ஆண்டர்சன், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமானவை. அதிலும் குறிப்பாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையும் கண்டிஷனும் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ளும் இந்திய வீரர்களை வீழ்த்த வேண்டுமென்றால், தரமான ஸ்பின் பவுலர்கள் தேவை. அப்படியிருந்தாலுமே, உள்நாட்டு கண்டிஷனில் சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர்களை வீழ்த்துவது கடினம். ஆனால், அதேவேளையில் இந்திய அணியிடம் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என, சொந்த மண்ணில் எதிரணியை பொட்டளம் கட்டக்கூடிய தரமான ஸ்பின் யூனிட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.