IPL 2023: கோலி, கோலி என முழங்கி மண்டை சூடேற்றிய ரசிகர்களை முறைத்த கம்பீர்..! வைரல் வீடியோ

விராட் கோலி - கம்பீர் இடையே கடும் மோதல் மூண்ட நிலையில், அந்த சம்பவத்திற்கு பின் ஓய்வறைக்கு செல்ல கம்பீர் படிகளில் ஏறிக்கொண்டிருந்த போது ரசிகர்கள் வேண்டுமென்றே கோலி, கோலி என முழங்கி கம்பீரை கடுப்பேற்றிய வீடியோ வைரலாகிவருகிறது.
 

gautam gambhir stares at fans who are chanting kohli name in ipl 2023 video goes viral

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையேயான மோதல் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது. ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டிக்கு பின், கோலி - கம்பீர் இடையே கடும் மோதல் மூண்டது.

இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த மோதலை அடுத்து, இவர்கள் இருவருக்கும் போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் முதல் முறையல்ல.

2013ம் ஆண்டு நடந்த மோதல் தான் கோலி - கம்பீர் இடையே 10 ஆண்டுகளாக நீடித்துவரும் பனிப்போருக்கு காரணம். அதற்கு முன் இருவருக்கும் இடையே நல்ல உறவுதான் இருந்துவந்தது. கோலியின் சர்வதேச கெரியரின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை அடித்த அதே போட்டியில் கம்பீர் 150 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதால் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் தன்னுடன் இணைந்து அந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த அப்போதைய இளம் வீரரான கோலிக்கு அந்த ஆட்டநாயகன் விருதை வழங்கி ஊக்குவித்தவர் கம்பீர்.

IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்

அதன்பின்னர் 2011 ஒருநாள் உலக கோப்பை ஃபைனலிலும் சச்சின், சேவாக் ஆட்டமிழந்த பின்னர் கம்பீர் - கோலி இடையேயான பார்ட்னர்ஷிப் முக்கியமானது. இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கின்றனர். இந்திய அணி தோனி தலைமையில் வென்ற டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளில் முக்கிய பங்காற்றியவர் கம்பீர். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை செய்தவர்.

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஜொலித்துவருகிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு கோலியும் அபாரமான பங்களிப்பை செய்திருக்கிறார். 2013 வரை இவர்களுக்கு இடையே நல்ல உறவுதான் இருந்தது. 2013 ஐபிஎல்லில் ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டியின்போது இருவருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.

அதன்பின்னரே இருவருக்கும் இடையே உறவு சரியாக இல்லை. விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்லாதது குறித்து கம்பீர் அவ்வப்போது விமர்சனம் செய்துவந்திருக்கிறார். அதேவேளையில், கோலியை பாராட்டியும் இருக்கிறார் கம்பீர்.

இப்படியாக இருந்துவந்த நிலையில், இந்த சீசனில் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இவர்கள் இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட்டின் அடையாளங்களாக திகழும் கம்பீர் - கோலி ஆகிய இருவரும் இதுமாதிரியான மோதல்களில் ஈடுபடாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜாம்பவான்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ, அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. அந்த சண்டைக்கு பின், கம்பீர் ஓய்வறைக்கு சென்றபோது, ஸ்டாண்டில் இருந்த ரசிகர்கள், வேண்டுமென்றே கோலி... கோலி... என முழங்கினர். அதைக்கேட்டு மேலும் கடுப்படைந்த கம்பீர் சில நொடிகள் அங்கேயே நின்று கோலி முழக்கமிட்ட ரசிகர்களை முறைத்துவிட்டுச்சென்றார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios