IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்
ஐபிஎல்லில் தொடர்ச்சியாக 2 முறை 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 2 தோல்விகளுடன் தொடங்கினாலும், அதன்பின்னர் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் மேலேறிவருகிறது.
முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. அடுத்த 2 போட்டிகளில் மீண்டும் தோற்றது. தோல்வியிலிருந்து மீண்டெழுந்த மும்பை இந்தியன்ஸ் அணி, மீண்டும் தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றிகரமாக விரட்டி அபார வெற்றி பெற்றது.
மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 214 ரன்களை குவித்தது. 215 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இஷான் கிஷன் 41 பந்தில் 75 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 66 ரன்களையும் குவிக்க, அதன்பின்னர் திலக் வர்மா 10 பந்தில் 26 ரன்கள் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்.
19வது ஓவரிலேயே 215 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்தது மும்பை அணி. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் 200 ரன்களுக்கும் அதிகமான வெற்றிகரமாக விரட்டிய முதல் அணி என்ற சாதனையை படைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.