உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பயிற்சியாளர் பதவியால் வரும் நிலையான எதிர்பார்ப்புகள் குறித்து வெளிப்படையாகக் கூறினார். ''நான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருப்பேனா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் முதலில், நான் எப்போதும் அழுத்தத்தில் இருக்கிறேன். ஏனெனில் பயிற்சியாளராக இருப்பதால், நீங்கள் முடிவுகளை விரும்புகிறீர்கள். வெற்றி அல்லது தோல்வியுடன் அது மாறாது'' என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
அழுத்தத்தில் இருக்கும் கவுதம் கம்பீர்
தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர், ''நாங்கள் முடிவுகளைப் பெற்றோமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் நான் எப்போதும் அழுத்தத்தில் இருக்கிறேன். நியூசிலாந்திற்குப் பிறகு நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், 'ஆம், நான் அழுத்தத்தில் இருக்கிறேன்' என்று நான் கூறியிருப்பேன். ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு, 'ஆம், நான் அழுத்தத்தில் இருக்கிறேன்' என்று நான் கூறியிருப்பேன்'' என்று கம்பீர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் அழுத்தம்
மேலும் ''சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும், நான் இன்னும் அழுத்தத்தில் இருக்கிறேன், ஏனென்றால் நான் பயிற்சியாளராக இருப்பதால், நீங்கள் எப்போதும் முடிவுகளை விரும்புகிறீர்கள். நீங்கள் இந்த அணியின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும், நாட்டிற்கான முடிவுகளை முடிந்தவரை எளிமையாகப் பெற விரும்புகிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு
தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் குறித்து பேசிய கவுதம் கம்பீர், ''உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் தேசிய அணியில் விளையாட கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும். இதற்கு கருண் நாயர் நல்ல உதாரணம். அவர் இப்போது இங்கிலாந்தில் இந்தியா ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்துள்ளார். அவரது அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும்'' என்று தெரிவித்தார். இதேபோல் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கம்பீர், ''ஏற்கெனவே 18 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து விட்டோம். திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்'' என்றார்.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.
