இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Indian team announcement for England Test series: இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 பேர் கொண்ட அணியை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய அணியில் இடம்பிடித்த சாய் சுதர்சன்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் கருண் நாயர், முகமது ஷமி நீக்கம்

இதேபோல் இந்திய வீரர் கருண் நாயர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2016ல் நவம்பர் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கருண் நாயருக்கு அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

 இந்திய அணியில் இடம் கிடைக்க தொடர்ந்து போராடி வந்த அவர் சையத் முஷ்டாக் அலி டிராபியில் 255 ரன்கள், விஜய் ஹசாரே டிராபில் 542 ரன்கள் எடுத்து மலைக்க வைத்தார். இந்த சிறப்பான செயல் திறன் காரணமாக அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே வேளையில் இந்திய அணியின் முன்னணி பாஸ்ட் பவுலர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்படவில்லை. மோசமான பார்ம் காரணமாகவும், முழுமையான உடற்தகுதியை எட்டாததாலும் அவர் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்திய அணியில் 7 பாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்கள்

இதேபோல் ஷர்துல் தாக்கூரும் மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா இருக்க சமீப காலமாக சரியான பார்மில் இல்லாத ரிஷப் பண்ட்டுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்துள்ளது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. பிசிசிஐ 5 பாஸ்ட் பவுலர்கள், 2 மீடியம் பாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்கள் மற்றும் 4 ஆல்ரவுண்டர்கள் என்ற வரிசையில் இந்திய அணியை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ:‍ சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.