இந்தியாவில் 175 அடிச்சும் நோ யூஸ்..! ஜடேஜாவின் பேட்டிங் குறித்து கம்பீர் அதிரடி
ரவீந்திர ஜடேஜா இலங்கைக்கு எதிராக அடித்த 175 ரன்கள் என்பது பெரிய விஷயமல்ல; வெளிநாட்டில் பயனுள்ள 40-50 ரன்கள் அடித்தால் அதுதான் பெரிய விஷயம் என்று கம்பீர் கூறியுள்ளார்.
இந்தியா வெற்றி:
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும், இலங்கை அணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜடேஜா அபாரம்:
குறிப்பாக அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக விளையாடினார். பேட்டிங்கில் 175 ரன்களை குவித்த ஜடேஜா, பவுலிங்கில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஜடேஜா அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையிலும், அவரது 175 ரன்கள் என்பது வியக்கத்தக்க ஒன்றல்ல என்பது கம்பீரின் கருத்து.
கம்பீர் கருத்து:
இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ரவீந்திர ஜடேஜாவின் இலங்கைக்கு எதிரான இன்னிங்ஸ் அவரது சிறந்த இன்னிங்ஸ் அல்ல. அவருக்கு இது நம்பிக்கையளிக்கும். இதன்மூலம் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு பெறுவார். ஆனால் வெளிநாடுகளில் அவர் சிறப்பாக ஆடுவதே முக்கியம். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் சதமடித்த பிறகு, தனஞ்செயா டி சில்வா, அசலங்கா, எம்பல்டேனியா ஆகிய பவுலர்கள் தான் பந்துவீசினர். அவர்கள் எந்தவிதத்திலும் ஜடேஜாவை அச்சுறுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் அடித்த இந்த 175 ரன்களைவிட, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மாதிரியான நாடுகளில் ஆடும்போது, அந்த கண்டிஷன்களில் 40-50 ரன்கள் அடித்தால் அதுவே மிக முக்கியமானதாகவும் பெரிதாகவும் அமையும். அதுதான் அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்யும். ஒருவேளை வெளிநாட்டில் சொதப்பிவிட்டால், அவருக்கு மாற்று வீரரைத்தான் அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்று கம்பீர் எதார்த்தத்தை கூறியுள்ளார்.