டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவை விட அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஷ்வின், கபில் தேவுடன் ஒப்பிடப்படும் நிலையில், அதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், மெல்போர்ன் டெஸ்ட்டில் அஷ்வினின் பந்துவீச்சுதான், தான் பார்த்ததிலேயே சிறந்த ஆஃப் ஸ்பின் ஸ்பெல் என புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தினார். 85 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 436 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் கபில் தேவை(434) பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பிடித்தார். அனில் கும்ப்ளேவிற்கு (619) அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளார் அஷ்வின். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை செய்து, ஒரு தேர்ந்த ஆல்ரவுண்டராக திகழும் நிலையில், அஷ்வின் லெஜண்ட் ஆல்ரவுண்டர் கபில் தேவுடன் ஒப்பிடப்படுகிறார்.

இந்நிலையில், அஷ்வின் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், கிட்டத்தட்ட கபில் தேவுக்கு இணையானவர் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்திருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. மெல்போர்ன் டெஸ்ட்டில் அஷ்வின் வீசிய ஸ்பெல் தான், நான் பார்த்ததிலேயே ஆஃப் ஸ்பின்னரின் சிறந்த ஸ்பெல். மெல்போர்ன் டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டத்தில் ஸ்மித், லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் ஆகிய மூவரது விக்கெட்டையும் வீழ்த்தினார் அஷ்வின். ஆஸ்திரேலியாவில், அதுவும் கூக்கபரா பந்தில் முதல் நாள் ஆட்டத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் இந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆஃப் ஸ்பின்னர்கள் கூக்கபரா பந்தில் பந்துவீசுவதையே விரும்பமாட்டார்கள். ஆனால் அஷ்வின் ஏற்படுத்தும் தாக்கம் கிட்டத்தட்ட கபில் தேவ் ஏற்படுத்துவதை போன்றதுதான் என்றார் கம்பீர்.