இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி மெகா ஸ்கோரை அடிக்க அந்த அணியின் இளம் வீரர் ஜாக் க்ராவ்லி தான் முக்கிய காரணம். 

127 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் க்ராவ்லியும் பட்லரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 359 ரன்களை குவித்தனர். களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்த 22 வயதே ஆன ஜாக் க்ராவ்லி, 170 பந்தில் சதத்தை எட்டினார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் சதம். முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய க்ராவ்லிக்கு, அதை முச்சதமாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 393 பந்தில் 34 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 267 ரன்களை குவித்து க்ராவ்லி ஆட்டமிழந்தார்.

நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது அப்பாஸ் ஆகியோரின் ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் யாசிர் ஷாவின் ரிஸ்ட் ஸ்பின் ஆகியவற்றை மிகத்திறமையாக எதிர்கொண்டு ஆடினார். சிறப்பாக எதிர்கொண்டார் என்றால், தடுப்பாட்டம் மட்டுமல்ல; தொடர்ச்சியாக சிங்கிள், டபுள்ஸ்களும் அவ்வப்போது சீரான இடைவெளியில் பவுண்டரிகளும் என அருமையாக ஆடினார் க்ராவ்லி. இடையிடையே குறுக்கிட்ட மழையால் கூட, க்ராவ்லியின் கவனத்தை சிதறடிக்க முடியவில்லை.

22 வயதே ஆன இளம் வீரரான க்ராவ்லி, தனது அபாரமான பேட்டிங்கால் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், ஜாக் க்ராவ்லிக்கு கங்குலி மிகச்சிறந்த அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு மிகச்சிறந்த 3ம் வரிசை பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டார். க்ளாஸ் பிளேயர்.. அவரை அனைத்து விதமான போட்டிகளிலும் தொடர்ந்து பார்க்க முடியும் என நம்புகிறேன் என்று பதிவிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை டேக் செய்து டுவீட் செய்துள்ளார் கங்குலி.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தலைசிறந்த கேப்டனுமான கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அடுத்தது, ஐசிசியின் தலைவராக கூட ஆகலாம் என்ற நிலை உள்ளது. அப்பேர்ப்பட்ட கங்குலியிடம் இருந்தே சிறந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ஜாக் க்ராவ்லி.