தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், முதலில் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரிதிமான் சஹாவே மீண்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்துவந்த ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு ஆளாகிவந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்ததால், அந்த போட்டியில் அவரால் விக்கெட் கீப்பிங் செய்யமுடியாமல் போனதையடுத்து, கேஎல் ராகுல் கீப்பிங் செய்தார். 

கேஎல் ராகுல் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக விக்கெட் கீப்பிங் செய்ததை அடுத்து, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவரே விக்கெட் கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முழுவதும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ததுடன் அருமையாக பேட்டிங்கும் ஆடினார். ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிவதால், இது அணிக்கு நல்ல பேலன்ஸை அளிப்பதால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ராகுலே விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். ராகுல் விக்கெட் கீப்பிங்கை ரசித்து மகிழ்ச்சியுடன் நேசித்து செய்துவருகிறார். 

இதையடுத்து கேஎல் ராகுல், ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்படுகிறார். இப்போது, கோலியும் அணி நிர்வாகமும் எப்படி ராகுலை விக்கெட் கீப்பிங் செய்யவைத்தார்களோ, அதை 17 ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர் முன்னாள் கேப்டன் கங்குலி. 2003 உலக கோப்பைக்கு முன்பாக, ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பராக்கினார். அணிக்காக எதையும் எப்போதும் செய்ய தயாராக இருக்கும் ராகுல் டிராவிட், அந்த பொறுப்பை மனமுவந்து ஏற்று சிறப்பாகவே செய்தார். 

Also Read - போன மேட்ச்சுக்கும் சேர்த்து இந்த மேட்ச்சில் அடித்த டிவில்லியர்ஸ்.. மிஸ்டர் 360 கம்பேக்.. எதிரணியின் பவுலிங்கை துவம்சம் செய்த தரமான சம்பவம்

எனவே ராகுல் டிராவிட்டை போலவே ராகுலும் விக்கெட் கீப்பிங் அவதாரமெடுத்ததை அடுத்து, கங்குலியை போல கோலி முடிவெடுத்திருப்பதாகவும் ஒப்பிடப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, அது விராட் கோலியின் முடிவு. அணி நிர்வாகமும் கேப்டனும் தான் ராகுலின் ரோலை முடிவு செய்ய வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ராகுல் சிறப்பாக ஆடியிருக்கிறார். அவரது டெஸ்ட் கெரியரை நன்றாகத்தான் தொடங்கினார். ஆனால் போகப்போக சரியாக ஆடாததால் இடத்தை இழந்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்தமட்டில் அவர் சிறப்பாக ஆடிவருகிறார். அவர் இதேபோல தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன். ஆனால் மறுபடியும் சொல்கிறேன்... அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது அணி நிர்வாகமும் கேப்டனும் எடுக்கும் முடிவு என்று கங்குலி தெரிவித்துள்ளார்.