பிக்பேஷ் லீக்கில் கிறிஸ் லின் தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஆடிவரும் டிவில்லியர்ஸ், கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை. அதிலும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான அவரது மந்தமான பேட்டிங் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர்போன டிவில்லியர்ஸ், மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்துகளை பறக்கவிடக்கூடியவர் என்பதால், மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர். ஆனால் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகள் பேட்டிங் ஆடி ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 25 ரன்கள் மட்டுமே அடித்து அதிர்ச்சியளித்தார் டிவில்லியர்ஸ்.

இந்நிலையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், கடந்த போட்டிக்கும் சேர்த்து அடித்து நொறுக்கியுள்ளார் டிவில்லியர்ஸ். மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்குன் இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் பென் கட்டிங் 22 பந்தில் 22 ரன்களும் மற்றொரு தொடக்க வீரரான சாம் ஹீஸ்லெட் வெறும் 18 ரன்களும் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கிறிஸ் லின் 31 பந்தில் 34 ரன்கள் அடித்து அவரும் அவுட்டானார். 

அனைவருமே பந்துக்கு நிகரான ரன் அடித்து ஆட்டமிழந்ததால் ஸ்கோர் குறைவாக இருந்தது. டிவில்லியர்ஸும் தொடக்கத்தில் மெதுவாகவே ஆடினார். 15வது ஓவரில் தனது அதிரடியை ஆரம்பித்தார் டிவில்லியர்ஸ். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார் டிவில்லியர்ஸ். அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசிய டிவில்லியர்ஸ், 17வது ஓவரில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரியும் விளாசினார். 18வது ஓவரில் ஒரு சிக்ஸரும் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் அடித்த டிவில்லியர்ஸ், வெறும் 37 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து, இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் லபுஷேன் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்களை விளாச, 20 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 186 ரன்களை குவித்தது. 

Also Read - தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு 3 முக்கியமான முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி

கடந்த போட்டியில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், 26 பந்தில் வெறும் 25 ரன்கள் மட்டுமே அடித்த டிவில்லியர்ஸ், இன்றைய போட்டியில் தாறுமாறாக அடித்து வெறும் 37 பந்தில் 71 ரன்கள் விளாசி செம கம்பேக் கொடுத்துள்ளார்.