உலக கோப்பை தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி ஜூன் 5ம் தேதி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் என ஒருசில இடங்கள் மட்டும் உறுதி செய்யப்பட வேண்டும். 

இந்த இடங்களையும் இந்நேரம் தேர்வுக்குழு உறுதி செய்திருக்கும். வரும் 15ம் தேதி(திங்கட்கிழமை) உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்நேரம் அணி உறுதி செய்யப்பட்டிருக்கும். 

நான்காம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், விஜய் சங்கர், ராயுடு, மனீஷ் பாண்டே, ரெய்னா என கடந்த 2 ஆண்டுகளில் பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆட்டத்திறன் மற்றும் அவர்கள் ஆடியதன் அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், முன்னாள் கேப்டன் கங்குலி, 15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார். மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுலையும் மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ள கங்குலி, விஜய் சங்கரையும் அணியில் சேர்த்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதனால் ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமாருடன் ஆர்சிபி அணியில் அபாரமாக பந்துவீசிவரும் நவ்தீப் சைனியை இந்திய அணியில் எடுத்துள்ளார். ராயுடு, ஜடேஜா ஆகியோரை கங்குலி அணியில் சேர்க்கவில்லை. 

கங்குலி தேர்வு செய்த உலக கோப்பை அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), தவான், ராகுல், விஜய் சங்கர், கேதர் ஜாதவ், தோனி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, சைனி.