ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் 7ம் தேதியிலிருந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. 

சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி, அபாரமாக ஆடிவருகிறது. 

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்த நிலையில், அதுபோதாதென்று கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி அணி நிர்வாகம். இருபெரும் ஜாம்பவான்களும் சிறப்பாக பயிற்சியளித்து ஆலோசனைகளை வழங்கி வெற்றிகளை குவிக்க காரணமாக திகழ்கின்றனர்.

ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் என இந்திய அணியின் எதிர்கால வீரர்களை உள்ளடக்கிய ஐபிஎல் அணிக்கு பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் பாண்டிங்கும் ஒருவர். பாண்டிங் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளது. பாண்டிங்கின் களவியூகம், வீரர்களை பயன்படுத்தும் முறை, பவுலிங் சுழற்சி என அனைத்துமே அபாரமாக இருக்கும்.

தற்போதைக்கு டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் பாண்டிங்கிற்கு, அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க வேண்டுமென்பதே குறிக்கோளாக உள்ளது. இந்நிலையில், பாண்டிங் எதிர்காலத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா என்று கங்குலியிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளரானால் இந்தியாவில் 8-9 மாதங்கள் தங்க வேண்டும். பாண்டிங் சொந்த நாட்டை விட்டு இந்தியாவில் அவ்வளவு நீண்டகாலம் தங்க சம்மத்திப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கங்குலி அதிரடியாக தெரிவித்துள்ளார்.