ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித்துக்கு டெஸ்ட் கெரியர் மட்டும் இதுவரை சரியாக அமையவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற கெத்துடன் கிரிக்கெட் உலகில் வலம்வருகிறார் ரோஹித் சர்மா. 

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அண்மையில் உலக கோப்பையில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி 5 சதங்களை அடித்து அசத்தினார். ரோஹித் நல்ல ஃபார்மில் இருப்பதால் மீண்டும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

ஆனால் ரோஹித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பதே பெரிய சந்தேகமாக உள்ளது. ரோஹித் சர்மாவை சேர்த்தால் மிடில் ஆர்டரில் ரஹானே அல்லது ஹனுமா விஹாரியை ஆடவைக்க முடியாது. ரஹானேவை தூக்குவதற்கு வாய்ப்பேயில்லை. அவர்தான் டெஸ்ட் அணியின் துணை கேப்டனே. ஆனால் ஹனுமா விஹாரி - ரோஹித் ஆகிய இருவரில் யார் ஆடுவார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. 

மிடில் ஆர்டரில் ரோஹித்தை இறக்கினால்தானே பிரச்னை. ரோஹித் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராகவே இறக்கலாம் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கங்குலி எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியின் பிரச்னையாக இருப்பது, ஆடும் லெவனில் ரோஹித்தை எடுப்பதா அல்லது ரஹானேவை எடுப்பதா என்பதுதான். தென்னாப்பிரிக்க தொடரிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. ரோஹித்தின் ஃபார்மை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உலக கோப்பையில் ரோஹித் அபாரமாக ஆடினார். நல்ல ஃபார்மிலும் உள்ளார். எனவே அவரையே தொடக்க வீரராக இறக்கலாம். அப்படி செய்தால், ரஹானே அவரது இடத்தில் வழக்கம்போல இறங்கலாம் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.