உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொதுவாக பவுலிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப் ஆகியோரின் வருகைக்கு பிறகு சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் முக்கிய பங்காற்றும் என்பதில் துளியும் ஐயமில்லை. வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் ஷமி மிரட்டிவருகின்றனர். ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் மற்றும் சாஹல் ஜோடி எதிரணிகளின் பேட்டிங் வரிசையை சிதைத்துவருகிறது. 

மூன்றாவது ஸ்பின் ஆப்சனாக கேதர் ஜாதவ் இருக்கிறார். தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்த அஷ்வின், ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக திகழ்ந்த அஷ்வின், இப்போதும் தரமான ஸ்பின்னர்தான். ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என்ற பேதங்கள் எல்லாம் ஸ்பின் பவுலிங்கில் கிடையாது. ஒரு தரமான ஸ்பின்னர் என்றுமே தரமான ஸ்பின்னர்தான். அந்த வகையில் அஷ்வின் உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்று காம்பீர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் வர்ணனையாளரராக இருந்துவரும் காம்பீர், மீண்டும் ஒருமுறை தனது கருத்தை வலுவாக பதிவு செய்துள்ளார். தரமான ஸ்பின்னரை அணியில் எடுக்க யோசிக்கக்கூடாது. 8வது வரிசையில் பேட்டிங் டெப்த்தை எல்லாம் பற்றி யோசிக்காமல் ஒரு தரமான ஸ்பின்னர் அணிக்கு தேவை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் அஷ்வினை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று காம்பீர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.