ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவடைய உள்ளது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய ஒரு இடத்திற்கு சன்ரைசர்ஸ், பஞ்சாப், கேகேஆர் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி, தொடரின் பிற்பாதியில் படுமோசமாக சொதப்பியது. சீசனின் முதல் 5 போட்டியில் 4ல் வென்ற கேகேஆர் அணி அடுத்து தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்றது. 

அதனால் புள்ளி பட்டியலில் பின் தங்கியது. 6 தொடர் தோல்விகளுக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த சீசனில் செம ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ரசலை பேட்டிங்கில் முன்வரிசையில் இறக்காதது ஒரு தவறாக, பல முன்னாள் வீரர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கிடையே மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த ஆண்ட்ரே ரசல், அணியின் தொடர் தோல்விக்கு தவறான முடிவுகள் எடுக்கப்படுவதுதான் காரணம் என்றும் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அணியின் சூழல் சரியில்லை என்றும் அதிரடியாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முன்வரிசையில் களமிறக்கப்பட்டார் ரசல். அந்த போட்டியில் 40 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். கேகேஆர் அணி வெற்றியும் பெற்றது. 

கேகேஆர் அணி, எஞ்சியிருக்கும் 2 போட்டிகளிலும் பெரிய வெற்றி பெற்றாலோ அல்லது கேகேஆர் இரண்டு போட்டிகளிலும் வென்று, சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் தோற்றாலோ கேகேஆர் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. 

இந்நிலையில், கேகேஆர் அணியின் சூழல் சரியில்லை என்றும் தவறான முடிவுகள் தான் தொடர் தோல்விக்கு காரணம் என்றும் ரசல் பகிரங்கமாக விமர்சித்தது குறித்து கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காம்பீர், அணியின் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்று ரசல் கூறியதை கண்டு நான் அதிருப்தியடைந்தேன். அதன்பின்னர் அவரது முழு பேட்டியையும் பார்த்தேன். அதைக்கேட்டதும் ஆரம்பத்தில் அவரது கருத்தை நான் தவறாக புரிந்துகொண்டதை உணர்ந்தேன். ரசல் சொன்னது சரிதான். தொடர் தோல்விகளின் விளைவாக அந்த வலியில் அதற்கான காரணத்தை ரசல் கூறியுள்ளார். ஆனால் அதை வெளிப்படுத்த அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் தவறு. 

கேகேஆர் அணியில் தவறான முடிவுகள் எடுக்கப்படுவதாக ரசல் கூறியது, தினேஷ் கார்த்திக்கின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்னை படுமோசமாக காயப்படுத்தியிருக்கும். யாரும் தோற்க வேண்டும் என்றோ தவறான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ நினைத்து செயல்பட மாட்டார்கள். அதனால் இதையெல்லாம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்க தேவையில்லை. 

சக வீரர்களின் கருத்துகளுடன் நானும் பலமுறை முரண்பட்டிருக்கிறேன். கேப்டன் தோனியுடனே பலமுறை முரண்பட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அணிக்குள்ளேயே முடிந்துவிட வேண்டும். பொதுவெளிக்கு எடுத்துவரக்கூடாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.