Asianet News TamilAsianet News Tamil

எனக்கு எப்படி தோனியோ அப்படித்தான் அஷ்வினுக்கு கோலி!! தெறிக்கவிடும் காம்பீர்

காம்பீருக்கும் தோனிக்கும் ஒத்துவராது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இந்திய அணியில் காம்பீர் இருந்தபோதே தோனியுடன் அவருக்கு மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

gambhir opinion about kohli ashwin rivalry
Author
India, First Published Apr 26, 2019, 12:27 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. 3 முறை சாம்பியனான சிஎஸ்கே, 16 புள்ளிகளுடன் இந்த சீசனில் முதலிடத்தில் உள்ளதோடு பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதிசெய்துவிட்டது. 

ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு நிகரான வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். அதன்பின்னர் கேகேஆர் அணி. கேகேஆர் அணி 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இரண்டு முறையுமே வென்று கொடுத்தது கவுதம் காம்பீர் தான். 

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு கடும் போட்டியளிக்கும் அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் தான். மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு முறை சிஎஸ்கேவை இறுதி போட்டியில் வீழ்த்தியுள்ளது. அதேபோல் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியும் ஒருமுறை சிஎஸ்கேவை இறுதி போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. 

காம்பீருக்கும் தோனிக்கும் ஒத்துவராது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இந்திய அணியில் காம்பீர் இருந்தபோதே தோனியுடன் அவருக்கு மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் ஓய்வு அறிவித்த காம்பீர், அதன்பின்னர் தோனியுடனான பனிப்போர் குறித்து மௌனம் கலைத்திருந்தார். 

தோனி தன்னை ஓரங்கட்ட நினைத்ததாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இவ்வாறு தோனி - காம்பீர் பனிப்போர் அனைவரும் அறிந்ததே. அது ஐபிஎல்லிலும் எதிரொலித்தது. ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியுடனான மோதுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என காம்பீர் தெரிவித்துள்ளார். 

ஆர்சிபி - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த காம்பீர், நான் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது சிஎஸ்கே அணியுடன் மோதுவது சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் இதை ஈகோ என சொல்லலாம். ஆனால் தோனி தலைமையிலான சிஎஸ்கேவுடன் மோதுவது எனக்கு பிடிக்கும். அதேபோல்தான் அஷ்வினுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். கோலி தலைமையிலான ஆர்சிபி அணியுடன் மோதி வெல்வதை அஷ்வினும் விரும்புவார் என்று நினைப்பதாக காம்பீர் தெரிவித்துள்ளார்.

காம்பீர் சொன்னது சரிதான். தோனியால் ஓரங்கட்டப்பட்ட காம்பீருக்கு எப்படி தோனியுடன் மோதுவது பிடிக்குமோ அதேபோல் கோலியால் ஓரங்கட்டப்பட்ட அஷ்வினுக்கு கோலியுடன் மோதுவது பிடித்திருக்கிறது. கோலி - அஷ்வின் இருவருக்கும் இடையேயான மோதலை ஆர்சிபி - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இருவரும் வெற்றி பெற காட்டிய முனைப்பு மற்றும் களத்தில் காட்டும் கூடுதல் ஆக்ரோஷம் ஆகியவற்றின் வாயிலாகவே அறியமுடியும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios