இந்திய அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டுவிட்டார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

மூன்றுவிதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட்டே முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இவர் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதால், அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் சொதப்பினார். நெருக்கடியான சூழலிலும் சொதப்பினார், நெருக்கடி இல்லாத நிதானமாக ஆட வாய்ப்பிருந்த சூழலிலும் சொதப்பினார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக வாய்ப்புள்ள சஞ்சு சாம்சனும் இஷான் கிஷானும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அதனால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. 

அதைத்தான் கம்பீர் தெரிவித்துள்ளார். உண்மையான திறமைசாலிகளுக்கு எப்போதுமே ஆதரவாக இருப்பவர் கவுதம் கம்பீர். அந்தவகையில், கம்பீர் நீண்ட காலமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருந்துவருகிறார். உலக கோப்பையிலேயே, அவரை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல அந்த இடத்தை கிட்டத்தட்ட ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்துவிட்ட நிலையிலும் கூட, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏவில் ஆடிய சஞ்சு சாம்சன் 92 ரன்கள் குவித்த பின்னர், சஞ்சு சாம்சனையே இந்திய அணியில் நான்காம் வரிசையில் இறக்கலாம் என்ற தனது கருத்தை மறுபடியும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள கம்பீர், ரிஷப் பண்ட் உணர்ச்சி பெருக்கெடுத்து அதிக உற்சாகத்துடனேயே இருக்கிறார். எனக்கு பிடித்தமான வீரரான சஞ்சு சாம்சனை ரிஷப் பண்ட் கவனிக்க வேண்டும். ரிஷப் பண்ட்டுக்கு சாம்சன் சீரியஸான சவாலாக திகழ்கிறார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.