உலக கோப்பை வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதித்த பிறகு, ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொதப்பினார். ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்டு ஆட திணறுகிறார். அதேபோல மித வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்ள ராயுடு திணறுகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பியதை அடுத்து, ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் வேறு வீரரை தேடுவதை உறுதிப்படுத்தியது. 

ராயுடு சொதப்பிய அதேவேளையில், விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடினார். எனவே விஜய் சங்கரை 4ம் வரிசையில் இறக்கினால், ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு, பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார் விஜய் சங்கர். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசைக்கு சரியாக இருப்பார்.

இந்நிலையில், நான்காம் வரிசைக்கு பல முன்னாள் ஜாம்பவான்களும் பல பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர். சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான திட்டங்களை கூட இந்திய அணி வைத்துள்ளது. இந்த வீரருக்கு இந்த இடம் என்று உறுதி செய்வதைவிட சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதுதான் சிறந்தது என்பது முன்னாள் கேப்டன் கபில் தேவின் கருத்து. 

4ம் வரிசை வீரர் மட்டுமல்லாது மாற்று விக்கெட் கீப்பரும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. நாளை உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 4ம் வரிசையில் சஞ்சு சாம்சனை களமிறக்கலாம் என கவுதம் காம்பீர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். 

சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் என்பதால் மாற்று விக்கெட் கீப்பராகவும் பயன்படுத்தி கொள்ளலாம். விக்கெட் கீப்பர் என்றாலும் ஃபீல்டிங்கிலும் அசத்திவிடுவார் சாம்சன். சிறந்த திறமைசாலியான அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்படுகிறது. இந்நிலையில், உலக கோப்பையில் நான்காம் வரிசை வீரர் குறித்து பேசிய காம்பீர், என்னை பொறுத்தவரை 4ம் வரிசை குறித்த எனது பார்வையில் தெளிவாக இருக்கிறேன். சஞ்சு சாம்சன் தான் 4ம் வரிசைக்கு மிகவும் சரியான வீரர். நான் எப்போதுமே பொதுக்கருத்திற்கு அப்பாற்பட்டு தரமான வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அந்த வகையில் சாம்சன் தான் சரியான வீரர் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் அண்மையில் ஏற்கனவே ஒருமுறை சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக காம்பீர் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.