இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பொதுவாகவே ஆக்ரோஷமான கேப்டன். அதனால் அவரது ஆக்ரோஷமும் ஆவேசமும் அணி முழுவதும் நிறைந்திருக்கும். மற்ற வீரர்களிடத்திலும் அதன் தாக்கத்தை காணமுடியும். ஆனால் நியூசிலாந்து தொடரை கேப்டன் கோலி அப்படி அணுகவில்லை. மென்மையாக கையாண்டார். 

அவரது போட்டி குணத்தின் வெளிப்பாடாகத்தான் அவரது ஆக்ரோஷம் இருக்கும். ஆனால் இந்த தொடரில் அதை சற்றும் காண முடியவில்லை. இந்நிலையில், கோலி நியூசிலாந்தை மென்மையாக அணுகுவதும் அவரது இயல்பான ஆக்ரோஷத்தை விட்டதும் கூட, அவர் சரியாக ஆடாததற்கும் அணியின் தொய்விற்கும் காரணமாக அமைந்துவிட்டது. 

விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு ஆதரவளிப்பவர்களை விட விமர்சிப்பவர்களும், ஆக்ரோஷத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவர்களுமே அதிகம். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமின் விக்கெட்டுகளை வெகுவாக கொண்டாடினார். ரசிகர்களை நோக்கியும் ஆக்ரோஷமாக திட்டினார். இதையடுத்து, கோலியின் ஆக்ரோஷம் குறித்து அவரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நடந்தது என்னவென்று முழுதாக தெரியாமல் கேள்வி கேட்காதீர்கள் என்று காட்டமாக பதிலளித்திருந்தார். 

சமகால வீரர்கள் சிலரும் கூட கோலியின் ஆக்ரோஷத்தை விமர்சித்திருக்கிறார்கள். அதேநேரத்தில் பலர், அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையையும் களத்தில் அவரது முழு ஈடுபாட்டையும் கண்டு வியந்து, அவரை பின்பற்றுகின்றனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களே கூட, கோலியின் ஆக்ரோஷ லெவலை விமர்சிக்கின்றனர். 

Also Read - ராகுல் டிராவிட்டின் பாணியில் கொரோனாவை எப்படி எதிர்கொள்வதுனு பாருங்க.. சுவாரஸ்யமான தொகுப்பு

இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளரும் கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவருமான மதன் லால் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மதன் லால், கோலி ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எல்லாருமே களத்தில் ஆக்ரோஷமாகவும் துடிப்புடனும் இருக்கும் கேப்டனைத்தான் விரும்புவார்கள். அப்படிப்பட்ட கேப்டன் தான் தேவை என்று நினைப்பார்கள். ஆனால் கோலியை விமர்சிக்கிறார்கள். கோலி களத்தில் செயல்படும் விதமும் அவரது அணுகுமுறையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக இருப்பதில்லை என்று ரசிகர்கள் வருந்தினர். ஆனால் இப்போது ஏன் இவ்வளவு ஆக்ரோஷம் என்று கேள்வி கேட்கின்றனர். நான் கோலியின் ஆக்ரோஷாத்தை என்ஜாய் பண்ணுகிறேன். அவரை மாதிரியான கேப்டன் தான் தேவை என்று கோலிக்கு ஆதரவாக மதன் லால் பேசியுள்ளார்.