உலக கோப்பை இந்த மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

இந்த அணிகளை மே 23ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் வலுவாக உள்ளன. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி என அதிரடி பேட்ஸ்மேன்களும் அருமையான ஆல்ரவுண்டர்களும் நிறைந்துள்ளனர். மார்க் உட், டேவிட் வில்லி, பிளங்கெட் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் சிறப்பாக உள்ளது. டேவிட் வில்லி மற்றும் பிளங்கெட் ஆகியோர் பேட்டிங்கும் நன்றாக ஆடுவர். 

ஏற்கனவே இங்கிலாந்து அணி சிறப்பான வீரர்களை கொண்டுள்ளதால், இளம் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஆதரவையும் குவித்தார் ஆர்ச்சர். ஆர்ச்சரை அணியில் எடுக்காததற்கு எதிர்ப்புகள் குவிந்தன. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஆர்ச்சரை அணியில் எடுக்கவேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. 

இந்நிலையில், ஆர்ச்சருக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஃப்ளிண்டாஃப் குரல் கொடுத்துள்ளார். ஆர்ச்சர் குறித்து பேசிய ஃப்ளிண்டாஃப், ஆர்ச்சர் மிகவும் எளிதாக அதிவேகமாக வீசுகிறார். அசால்ட்டாக இவ்வளவு வேகத்தை ஜெனரேட் செய்வது கடினம். ஸ்லோ பந்துகள், யார்க்கர், பவுன்சர்கள் என அனைத்துவிதமான பந்துகளையும் கட்டுப்பாட்டுடனும் தெளிவாகவும் வீசுகிறார். ஆர்ச்சர் கண்டிப்பாக உலக கோப்பை அணியில் இருக்க வேண்டும். அதற்காக யாரை நீக்குவது என்று கேட்டால், யாரை வேண்டுமானாலும் நீக்கிவிட்டு ஆர்ச்சரை சேர்க்கலாம் என மிகவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.