டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி வீரர்கள் டிராபியோடு டெல்லி வந்த நிலையில் இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் வைத்து வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. பார்படாஸில் நடைபெற்ற இந்த போட்டியைத் தொடர்ந்து பெரில் சூறாவளி தாக்கம் ஏற்பட்ட நிலையில் இந்திய அணி வீரர்கள் 4 நாட்களுக்கு பிறகு இன்று காலை டெல்லி வந்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு அவருடன் விருந்திலும் இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் மாலை 5 மணிக்கு வெற்றி பேரணி நடத்துகின்றனர். மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்கின்றனர். இந்திய அணி வீரர்களி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் பேருந்தும் தயார் நிலையில் உள்ளது.
கடைசியாக இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் வெற்றி கொண்டாட்டமும், பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதற்காக வான்கடே மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முதலில் வரும் ரசிகர்களுக்கு முன்னுரிமை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
