ரசிகரின் முகத்தை பதம் பார்த்த டிம் டேவிட் அடித்த சிக்ஸர் –முதலுதவிக்கு அழைத்து சென்ற பாதுகாவலர்!
மும்பை இந்தியன்ஸ் வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்திய நிலையில் ரசிகருக்கு முதலிவி அளிப்பதற்கு பாதுகாவலர் அழைத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று மும்பை கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் 84 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 41 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 68 ரன்கள் கொடுத்தார். நுவான் துஷாரா 56 ரன்கள் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்தார். பும்ரா, சாவ்லா மற்றும் நபி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே திணறி வந்த ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த இஷான் கிஷான் 14 ரன்களில் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் கூட்டணி சேர்ந்து விளையாடினர். இதில், சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் 26 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். மும்பை இந்தியன்ஸ் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.
Kam see kam 8 aise aur chahiye.#IPLUpdate #DCvsMI #MumbaiIndians #T20WorldCup2024 pic.twitter.com/LoywbZ7rN0
— Rohan Desai (@rohandesai0) April 27, 2024
ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடிய நிலையில், 46 ரன்களில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்த நேஹல் வதேரா 4 ரன்னில் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்திருந்தது. டிம் டேவிட் களமிறங்கி சரவெடியாக சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார்.
போட்டியின் 14ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். அந்த ஓவரின் 13.5ஆவது பந்தில் டிம் டேவிட் சிக்ஸர் அடித்தார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவரது பந்தில் பட்ட பந்து பின்னாடி நின்றிருந்த ரசிகரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கிரிக்கெட் கமெண்டரியிலும் பேசப்பட்டது. அதன் பிறகு அங்கு வந்த பாதுகாவலர் காயமடைந்த ரசிகரை முதலுதவிக்காக அழைத்துச் சென்றார்.
கடைசியில் டிம் டேவிட்டும் 37 ரன்னில் வெளியேறினார். முகமது நபி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடித்து விளையாட வேண்டிய நிலையில், 19ஆவது ஓவரில், 2 சிக்ஸர் உள்பட 16 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியில் 20ஆவது ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. இதில், முதல் பந்திலேயே திலக் வர்மா 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ரன் அவுட்டானார். அவர், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் பியூஷ் சாவ்லா 10 ரன்னும், லூக் உட் 9 ரன்னும் எடுக்கவே மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. 5ஆவது இடத்திலிருந்த சென்னை 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது