டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான் வாரிசு வீரர்.. மாற்று வீரராக அணிக்குள் நுழைந்த அதிரடி மன்னன்
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து கடைசி நேரத்தில் லெக் ஸ்பின்னர் உஸ்மான் காதிர் விலக, அவருக்கு மாற்று வீரராக ஃபகர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் 16(நாளை) முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று தீவிரமாக தயாராகிவருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 23ம் தேதி மோதுகின்றன. அந்த போட்டி தான் சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு, அந்த அணி அறிவிக்கப்பட்டபோதே கடும் விமர்சனத்துக்குள்ளானது. கேப்டன் பாபர் அசாம் அவரது நண்பர்களை அணியில் எடுப்பதாக விமர்சனம் எழுந்தது.
இதையும் படிங்க - அரியலூர் கொலை சம்பவத்துக்கு காரணம் கோலியா..? கோலியை கைது பண்ணுங்க.. கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்
பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதிரின் மகன் உஸ்மான் காதிரை அணியில் எடுத்ததால் தான் அந்த விமர்சனம் எழுந்தது. டி20 உலக கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்றபோதிலும், ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லாத ரிஸ்ட் ஸ்பின்னர் உஸ்மான் காதிரை அணியில் எடுத்தது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், அவர் காயம் காரணமாக டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் மெயின் அணியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்ட ஃபகர் ஜமான் முழு ஃபிட்னெஸை பெற்றுள்ளார். ஆனால் உஸ்மான் காதிர் காயமடைந்ததால் அவர் ரிசர்வ் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார். அவரது இடத்தில் அதிரடி பேட்ஸ்மேன் ஃபகர் ஜமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஃபகர் ஜமான் முன்பே பாகிஸ்தான் மெயின் அணியில் எடுக்கப்படாதது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் - ரிஸ்வானையே அதிகம் நம்பியிருக்கிறது. மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் ஃபகர் ஜமான் பேட்டிங் ஆர்டருக்கு வலுசேர்ப்பவர். ஆனாலும் அவர் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்போது உஸ்மான் காதிருக்கு பதிலாக ஃபகர் ஜமான் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க - மகளிர் ஆசிய கோப்பை: ஃபைனலில் இலங்கையை வீழ்த்தி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபகர் ஜமான், ஆசிஃப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத்.
ரிசர்வ் வீரர்கள் - முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.