கிரிக்கெட் வரலாற்றில் எல்லா காலக்கட்டத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் என பெரும்பாலான பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். 

சச்சின் டெண்டுல்கர் அவுட்டாகிவிட்டால், அதற்கு பின்னர் போட்டியை பார்க்காமல் ரசிகர்கள் எழுந்து சென்ற காலம் உண்டு. அந்தளவிற்கு களத்தில் மட்டுமல்லாது ரசிகர்களின் மனங்களிலும் ஆதிக்கம் செலுத்திய, அபாரமான, அசாத்தியமான பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். 

அப்பேர்ப்பட்ட தலைசிறந்த பேட்ஸ்மேனுக்கே பயனுள்ள ஆலோசனையை கூறியவர் நம்ம சென்னைக்காரர். கிரிக்கெட் அரங்கில் கடந்த 2 நாட்களாக ஹாட் டாபிக் என்றால், அது, சச்சின் தேடும் அந்த நபர் யார் என்பதுதான். கடந்த 14ம் தேதி சச்சின் டெண்டுல்கர், ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். 

அதில், சென்னையில் ஒருமுறை டெஸ்ட் போட்டியில் ஆடியபோது தாஜ் கோரமன்டல் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது நான் காஃபி கேட்டேன். அந்த ஹோட்டலின் வெயிட்டர் ஒருவர் ரூமில் கொண்டுவந்து கொடுத்தார். அப்போது, நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால், நான் உங்களிடம் கிரிக்கெட் குறித்து கொஞ்சம் பேசலாமா என்று என்னிடம் கேட்டார். அதனால் என்ன, பேசுங்கள் என்று சொன்னேன். நீங்கள் கைக்காப்பு(கைக்கவசம் - arm guard) அணிந்து ஆடும்போது, நீங்கள் பேட்டை சுழற்றும் முறையே மாறிவிடுகிறது. உங்களது இயல்பான ஆட்டமாக அது தெரியவில்லை என்று கூறினார். இந்த விஷயத்தை இதற்கு முன்னால், இவ்வளவு உன்னிப்பாக கவனித்து உலகில் யாருமே என்னிடம் சொன்னதில்லை. ஆனால் அவர், என்னுடைய மிகத்தீவிரமான ரசிகராம். என்னுடைய ஒவ்வொரு ஷாட்டையும் உற்று கவனிப்பாராம். உண்மையாகவே ஒரு விஷயம் சொல்கிறேன்.. அவர் சொன்னதற்கு பிறகு, என்னுடைய கைக்காப்பை(arm guard) மாற்றி வடிமைத்தேன் என்று சச்சின் கூறினார். 

அதற்கடுத்து பதிவிட்ட டுவீட்டில், இந்த விஷயத்தை தமிழில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், அந்த வெயிட்டரை தேடுவதாகவும், அவரை கண்டுபிடிக்க அனைவரும் உதவுமாறும் ஒரு டுவீட் செய்திருந்தார். 

இந்நிலையில், அந்த நபர் யார் என்பது தெரிந்துவிட்டது. சென்னை பெரம்பூரை சேர்ந்த குரு பிரசாத் தான் அது. இதையடுத்து ஏசியாநெட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல கேள்விகளுக்கு பதிலளித்தார். சச்சின் தேடும் அந்த நபர் அவர்தானா என்பதை உறுதிப்படுத்த கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் குருபிரசாத் பதிலளித்தார். 

”2001ல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி சென்னையில் நடந்தது. அந்த போட்டி முடிந்து வீரர்கள் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தனர். நான் தாஜ் கோரமண்டல் ஊழியர் எல்லாம் இல்லை. க்ரூப் 4 செக்யூரிடாஸ் கம்பெனியில் அப்போது நான் பாதுகாவலர் பணியில் இருந்தேன். பாதுகாப்பு பணிக்கு எனக்கு ஒதுக்கப்பட்ட தளத்தில் தான் சச்சின் டெண்டுல்கர் தங்கியிருந்தார். அவர் அறையை விட்டு வெளியே வந்தபோது, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அந்த ஒரு நிமிடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. 

சார், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் கிரிக்கெட் பற்றி உங்களிடம் பேசலாமா என்று கேட்டேன். அவர் சரி என்று சொன்னார். சார், நீங்கள் அணியும் முழங்கை கவசம்(elbow guard) உங்கள் பேட்டிங்கிற்கு இடையூறாக இருப்பதாக தெரிகிறது. அதை அணிந்து ஆடும்போது, உங்களது மணிக்கட்டு ஃப்ரீயாக நகராமல் முடங்குகிறது. அது உங்களது பேட்டிங்கை பாதிப்பதாக தெரிகிறது என்றேன். அது எப்படி உங்களுக்கு தெரிகிறது? அந்தளவிற்கு என் பேட்டிங்கை உற்றுநோக்குகிறீர்களா? என்று சச்சின் கேட்டார். ஆம்.. உங்கள் பேட்டிங்கை டிவி ரிப்ளே மற்றும் ஹைலைட்ஸ் முழுவதுமாக பார்ப்பேன் என்று சொன்னேன். சரி.. இதுகுறித்து நான் பரிசீலிக்கிறேன் என்று கூறிவிட்டு சச்சின் சென்றதாக குருபிரசாத் தெரிவித்தார். 

சச்சின் டெண்டுல்கர், தனது பேட்டியில், இந்த சம்பவம் நடந்தது எந்த தொடரின்போது என்று கூறவில்லை. மேலும் தனக்கு காஃபி கொண்டுவந்தவர் தான் இந்த ஆலோசனையை கூறியதாக சொன்னார். ஆனால் குருபிரசாத், சச்சின் டெண்டுல்கருக்கு காஃபி கொண்டு செல்லவில்லை. அவர் செக்யூரிட்டியாக இருந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், அது எந்த ஆண்டு நடந்த தொடர், எந்த அணிக்கு எதிரான தொடர் என்பதையெல்லாம் கூறவில்லை. சச்சின் தேடும் சரியான நபருக்கு அது தெரியும் என்பதால், உண்மையான நபரை கண்டறிவதற்காக கூட சொல்லாமல் இருந்திருக்கலாம். குரு பிரசாத், 2001ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் என்று கூறியதன் மூலம், சச்சின் தேடும் சரியான நபர் நான் தான் என்பதை உறுதிப்படுத்துகிறார். 

அதேபோலவே, அந்த நபர் காஃபி கொண்டுவந்தார் என்று மறந்தவாறு சச்சின் கூறியிருப்பாரா அல்லது உண்மையான நபரை கண்டறிவதற்கான டெஸ்ட்டா என்று கேட்டதற்கு, 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்து சரியாக கூறிய சச்சினுக்கு, அது மறந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அதுவும் சரியான நபரை கண்டறிவதற்கான புதிராக இருக்கலாம் என்று குரு பிரசாத் தெரிவித்தார். 

சச்சின் ஒரு நபரை தேடுகிறார் என்றால், உடனடியாக, ஆம்.. நான் தான் சச்சினுக்கு காஃபி எடுத்து சென்றேன் என்று பொய் கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி யாராவது கூறினால் அவர் பொய் சொல்கிறார் என்று கண்டுபிடித்துவிடலாம். ஆனால் உண்மையாகவே அந்த நபருடன் எந்த சூழலில் பேசினோம் என்பது சச்சினுக்கு தெரிந்திருக்கும். எனவே சரியான நபராக இருந்தால், அவர் நடந்ததை அப்படியே கூறுவார் என்பதற்காகக்கூட அப்படி சொல்லியிருக்கலாம். 

தனது ஆலோசனைக்கு பின், சச்சின் டெண்டுல்கர், தனது முழங்கை கவசத்தை மாற்றி வடிவமைத்ததையும் தான் கவனித்ததாக குரு பிரசாத் தெரிவித்தார்.