இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்வது குறித்து யோசிக்க வேண்டும் என இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். 

2015 உலக கோப்பையில் வாங்கிய மரண அடிக்குப்பின், இங்கிலாந்து அணியை அடுத்த 4 ஆண்டுகளில் வேறு லெவலில் உருவாக்கி, 2019ல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் கேப்டன் இயன் மோர்கன். கடந்த 2-3 ஆண்டுகளாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்தது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அணுகுமுறையை மாற்றி வலுவான அணியாக உருவாக்கியதில் கேப்டன் இயன் மோர்கனின் பங்களிப்பு அளப்பரியது. உலக கோப்பையையே வென்றிராத இங்கிலாந்து அணிக்கு 2019 உலக கோப்பையை வென்று கொடுத்து, முதல் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார் இயன் மோர்கன். 

உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இயன் மோர்கனுக்கு முதுகுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் முழு ஈடுபாட்டுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனாலும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக இறுதி போட்டிவரை ஆடினார். அவரது முதுகுவலி இன்னும் சரியாகவில்லை. 

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸில் நடந்துவரும் நிலையில், அங்கிருந்த இயன் மோர்கனிடம், டி20 உலக கோப்பை வரை இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயன் மோர்கன், நேர்மையாக சொல்கிறேன்.. இதுகுறித்து சிந்திக்க எனக்கு நீண்டநேரம் தேவைப்படுகிறது. கேப்டனாக தொடர்வது குறித்து முடிவெடுப்பது மிகப்பெரிய விஷயம், பெரிய பொறுப்பும் கூட. நான் முழு உடற்தகுதியை பெற போதுமான காலம் எனக்கு தேவை. எனவே அதன்பின்னர் தான் கேப்டனாக தொடர்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று இயன் மோர்கன் தெரிவித்துவிட்டார்.