ஒயின் மோர்கன் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய உலக கோப்பை வின்னிங் கேப்டன்கள் இருவரும் ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் இஷான் கிஷன் ரூ.15.25 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். தீபக் சாஹரை அவர் ஏற்கனவே ஆடிய சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2வது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்.
இவர்கள் எல்லாம் அதிகமான தொகைக்கு விலைபோன அதேவேளையில், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய வீரர்களாக திகழும் சிலரை எந்த அணியுமே எடுக்க முன்வராமல் அவர்கள் விலைபோகவில்லை என்பது பெரும் அதிர்ச்சி.
ஸ்டீவ் ஸ்மித், அடில் ரஷீத், மார்னஸ் லபுஷேன், டேவிட் மில்லர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பெரிய வீரர்கள் சிலர் விலைபோகவில்லை. இந்த பட்டியலில், ஐசிசி உலக கோப்பைகளை வென்ற கேப்டன்களும் உள்ளனர்.
2019 ஒருநாள் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கனை அவரது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. கடந்த சீசனில் கேகேஆர் அணியை வழிநடத்திய ஒயின் மோர்கன் சரியாக விளையாடவில்லை. அவரது பேட்டிங் படுமோசமாக இருந்தது. எனவே அவரை தக்கவைக்க விரும்பாத கேகேஆர் அணி, அவரை கழட்டிவிட்டு, ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்தது. ஷ்ரேயாஸையே கேகேஆர் கேப்டனாகவும் நியமிக்கவுள்ளது. இந்நிலையில், ஒயின் மோர்கனை அவரது அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட கேகேஆர் அணி ஆர்வம் காட்டவில்லை.
அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் விலைபோகவில்லை. அவரது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்குக்கூட எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. ஆரோன் ஃபின்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பை வென்றிருந்தாலும், அவரது ஆட்டம் மெச்சும்படியாக இல்லை என்பதால் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.
ஆனாலும் கூட, மோர்கனும் ஃபின்ச்சும் விலைபோகாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது.
