ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 5 ஓவர்கள் தாமதமாக பந்துவீசிய இங்கிலாந்து அணிக்கு மொத்த சம்பளமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 147 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபார சதம் (152) மற்றும் டேவிட் வார்னரின் சிறப்பான பேட்டிங்கால் (94) 425 ரன்களை குவித்தது.

258 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 20 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாது, மொத்த சம்பளத்தையும் அபராதமாக செலுத்துகிறது இங்கிலாந்து அணி. ஐசிசி விதிப்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தாமதமாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் அணி வீரர்களின் ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் தாமதமாக வீசியது. அதன்விளைவாக 100 சதவிகித ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டியின் ஆட்டநாயகனான ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கும் அவரது ஊதியத்தில் 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸை சீண்டியதற்காக ஹெட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.