அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் 4 மாதங்களுக்கு பிறகு ஜூலை மாதம் மீண்டும் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடிக்கும் இங்கிலாந்து அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. 

இதற்கிடையே, அயர்லாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இங்கிலாந்து அணி, ஜூலை 30, ஆகஸ்ட் 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ளது. 

அந்த தொடருக்கான 14 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவேண்டும் என்பதற்காக, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ஓராண்டு மற்றும் அதற்கும் மேலாக அணிக்காக ஆடாமல் இருந்த டேவிட் வில்லி, ஜேம்ஸ் வின்ஸ், ரீஸ் டாப்ளி ஆகிய வீரர்களுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கு முந்தைய தொடர் வரை இங்கிலாந்து அணியில் ஆடிய டேவிட் வில்லிக்கு, உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோலவே, இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிற டாப்ளி, 2016ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஆடவில்லை. 

இந்நிலையில், அவர்களுக்கெல்லாம் மீண்டும் இந்த அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், டாம் பாண்ட்டன், டாம் கரன் ஆகியோரும் உள்ளனர். 

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி: 

இயன் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், டாம் கரன், லியாம் டாவ்சன், ஜோ டென்லி, சாகிப் மஹ்மூத், அடில் ரஷீத், ஜேசன் ராய், ரீஸ் டாப்ளி, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.