ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித் மற்றும் லபுஷேனை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. லபுஷேன் 48 ரன்கள் அடிக்க, ஸ்மித் 80 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் பேட்டிங் ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் டென்லி 94 ரன்களையும் பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களையும் குவித்தனர். பட்லர் அதிரடியாக ஆடி 47 ரன்கள் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் அடித்திருந்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஆர்ச்சரை கம்மின்ஸும் லீச்சை லயனும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. 

மொத்தமாக 398 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. சவாலான இலக்கை விரட்ட களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களில் மார்கஸ் ஹாரிஸ், 5வது ஓவரிலேயே ஒற்றை இலக்கத்தில் ஸ்டூவர்ட் பிராடின் பந்தின் ஆட்டமிழந்தார். 18 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், வார்னருடன் லபுஷேன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.