1000 கை கொண்ட வீரர் போன்று திகழ்ந்த ஆலி போப் – 420 ரன்கள் குவித்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து!
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியானது 420 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 436 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள், கேஎல் ராகுல் 86 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணி 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் இருவரும் ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரூட் 2, ஜானி பேர்ஸ்டோவ் 10, பென் ஸ்டோக்ஸ் 6 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த பென் ஃபோக்ஸ் 34 ரன்னில் ஆட்டமிழக்க, ரெஹான் அகமது 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த டாம் ஹார்ட்லி 34 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஆலி போப் மட்டும் கடைசி வரை நின்று விளையாடி 196 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பமான திகழ்ந்தார். அவரது அபாரமான பேட்டிங்கால் இங்கிலாந்து 420 ரன்கள் குவித்தது.
கடைசி வரை அவரது விக்கெட்டை கைப்பற்ற இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் பலன் அளிக்கவில்லை. ஒருவழியாக பும்ரா ஆலி போப் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.