உலக கோப்பையை வென்ற உற்சாகத்தில், ஆஷஸ் தொடருக்காக தயாராகிவரும் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மரண அடி வாங்கியது. 

இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜேசன் ராய் அறிமுகமானார். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். அறிமுக போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்து ஜேசன் ராய் ஏமாற்றினார். 

அவரை தொடர்ந்து 6 ரன்களில் பர்ன்ஸ் வெளியேற, 23 ரன்கள் அடித்த ஜோ டென்லியும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஜோ ரூட், 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூவரும்  டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இங்கிலாந்து அணி 43 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சாம் கரன் 18 ரன்களும் ஓலி ஸ்டோன் 19 ரன்களும் அடித்தனர். 24 ஓவர்களில் வெறும் 85 ரன்களுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 

உலக கோப்பையை வென்று 10 நாட்களே ஆனநிலையில், அயர்லாந்திடம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மரண அடி வாங்கியது இங்கிலாந்து அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடவுள்ளது. இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

அடுத்ததாக ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது இங்கிலாந்து அணிக்கு மிகமிக அவசியம்.