Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND கிறிஸ் வோக்ஸின் அதிரடி அரைசதத்தால் சிக்கலில் இந்தியா..!

4வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸின் கடைசி நேர அதிரடி அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

england leading 99 runs after first innings of fourth test against india
Author
Oval, First Published Sep 3, 2021, 10:22 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித்(11), ராகுல்(17), புஜாரா(4), ஜடேஜா(10), ரஹானே(14) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். 36 பந்தில் தாகூர் 57 ரன்களை விளாச, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. நல்ல ஃபார்மில் சதங்களை விளாசி கொண்டிருந்த ஜோ ரூட்டை 21 ரன்னில் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். நைட் வாட்ச்மேனாக இறங்கிய ஓவர்டன் ஒரு ரன்னிலும், டேவிட் மலான் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் பேர்ஸ்டோவும் ஆலி போப்பும் இணைந்து சிறப்பாக ஆடி 6வது விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 37 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஆலி போப், 81 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய மொயின் அலி 35 ரன்கள் அடித்தார். 

போப் - மொயின் அலி ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மொயின் 35 ரன்னிலும், ஆலி ராபின்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழக்க 255 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்தது.

கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸுடன் ஆண்டர்சன் ஜோடி சேர, ஆண்டர்சனை முடிந்தவரை மறுமுனையில் நிறுத்திவிட்டு, அதிரடியாக அடித்து ஆடிய கிறிஸ் வோக்ஸ் பவுண்டரிகளை விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 84வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து, அடுத்த ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைப்பதற்காக ரன் ஓடும்போது ரன் அவுட்டானார் கிறிஸ் வோக்ஸ். 

கிறிஸ் வோக்ஸ் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்து, 99 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

99 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது இந்திய அணி. 99 ரன்கள் என்ற பெரிய பின்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடும் இந்திய அணி, அந்த 99 ரன்களை அடித்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை ஈடுகட்டிவிட்டு, அதன்பின்னர் போதுமான ஸ்கோர் அடித்து இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios