இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 583 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இங்கிலாந்து அணி, 127 ரன்களுக்கே ரோரி பர்ன்ஸ், சிப்ளி, ஜோ ரூட், ஓலி போப் ஆகிய 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாக் க்ராவ்லி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி 359 ரன்களை குவித்தது. களத்திற்கு வந்தது முதலே சீரான வேகத்தில் ஸ்கோர் செய்த ஜாக் க்ராவ்லி, இரட்டை சதமடித்தார். 267 ரன்களை குவித்து அவர் ஆட்டமிழந்தார். இதுதான் க்ராவ்லியின் முதல் டெஸ்ட் சதம். முதல் சதத்தையே முச்சதமாக மாற்றும் வாய்ப்பு க்ராவ்லிக்கு கிடைத்தது. ஆனால் க்ராவ்லி அந்த சாதனை வாய்ப்பை தவறவிட்டு 267 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஜோஸ் பட்லரும் சதமடித்தார். அவர் 152 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கிறிஸ் வோக்ஸ் 40 ரன்களையும் டோமினிக் பெஸ் 27 ரன்களையும் ஸ்டூவர்ட் பிராட் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்களையும் வேகமாக அடிக்க, இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்களை குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

அதன்பின்னர் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் மூன்றாவது செசனின் இடையே, முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகிய இருவரையும் முறையே 4 மற்றும் ஒரு ரன்னில் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.  இதையடுத்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமையும் 11 ரன்களில் வீழ்த்தினார் ஆண்டர்சன். ஆண்டர்சனின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. அசார் அலி களத்தில் இருக்க, இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது.