கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. 

கொரோனா உருவான சீனாவைவிட இத்தாலியில், கொரோனாவிற்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஈரான், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கமும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது அவசியம் என்பதால், முடிந்தவரை அனைவருமே அவரவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு, அனைத்து நாட்டு அரசாங்கங்களும் அறிவுறுத்தியுள்ளன. 

மக்கள் ஓரிடத்தில் மொத்தமாக கூடக்கூடாது என்பதற்காக ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் ஆகியவையே மூடப்பட்டுவிட்டன. அதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

வரும் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் கூட, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் தொடங்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. 

கிரிக்கெட் வீரர்கள் கேன் ரிச்சர்ட்ஸன், ஃபெர்குசன் ஆகியோருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு, பின்னர் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மஜித் ஹக்கிற்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், மே 28ம் தேதிவரை இங்கிலாந்தில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படமாட்டாது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. இங்கிலாந்திலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அதனால் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், கவுண்டி கிரிக்கெட் நிர்வாகிகள், எம்சிசி மற்றும் பிசிஏ அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பின்னர் கவுண்டி கிரிக்கெட் உட்பட, எந்தவிதமான உள்நாட்டு போட்டிகளும் இங்கிலாந்தில் வரும் மே 28ம் தேதி வரை நடத்தபப்டமாட்டாது என்று அறிவித்துவிட்டது. 

கொரோனாவின் வீச்சும் தாக்கமும் தீவிரமடைந்துவரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், அவர்களது குடும்பம், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனும் பாதுகாப்புமே முக்கியம் என்பதால், மே 28ம் தேதிவரை எந்தபோட்டிகளும் நடத்தப்படமாட்டாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச அளவிலான போட்டிகள் எல்லாம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.