கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்துவருகின்றன.  சர்வதேச போட்டிகள் தொடங்கிவிட்ட நிலையில், டி20 லீக் தொடர்களும் நடக்க தொடங்கிவிட்டன. கரீபியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. ஐபிஎல் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. 

இங்கிலாந்தில் கிளப் போட்டிகளும் நடந்துவருகின்றன. இந்நிலையில், ஹாய்லேண்ட்ஸ்வைன் மற்றும் டென்பி கிரிக்கெட் கிளப் ஆகிய 2 கிளப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஹாய்லேண்ட்ஸ்வைன் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் ஹாலிடே, வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடினார். இந்த போட்டியில் காட்டடி அடித்த ஹாலிடே, 21 பவுண்டரிகள் மற்றும் 34 சிக்ஸர்களுடன் 316 ரன்களை குவித்தார்.

அதிரடியாக ஆடி 45 பந்தில் சதமடித்த ஹாலிடே, அடுத்த சதத்தை 36 பந்திலும், மூன்றாவது சதத்தை வெறும் 29 பந்திலும் அடித்தார். இப்படியாக வெறும் 110 பந்தில் முச்சதமடித்த ஹாலிடே, 113 பந்தில் 316 ரன்களை குவித்து சாதனை படைத்தார். 21 பவுண்டரிகள் மற்றும் 34 சிக்ஸர்களை விளாசினார் ஹாலிடே. அவர் அடித்த 316 ரன்களில் 288 ரன்கள் பவுண்டரிகளின் மூலமாக மட்டுமே அடிக்கப்பட்டவை. 

ஹாலிடேவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய அந்த அணியின் கேப்டன் எஸ்பி சிங் அரைசதம் அடித்தார். ஹாலிடேவின் அதிரடியால் ஹாய்லேண்ட்ஸ்வைன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 456 ரன்களை குவித்தது. இதையடுத்து கடினமான இலக்குடன் ஆடிய டென்பி கிரிக்கெட் கிளப் அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 378 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
 
இது சர்வதேச கிரிக்கெட்டிலோ அல்லது முதல் தர கிரிக்கெட்டிலோ ஆடப்பட்ட இன்னிங்ஸ் இல்லையென்றாலும், கிறிஸ் ஹாலிடேவின் இந்த காட்டடி இன்னிங்ஸ் மிகச்சிறப்புமிக்கது.