5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் ஆடியது இங்கிலாந்து அணி. 

நேப்பியரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் மாலனும் மோர்கனும் நியூசிலாந்து பவுலிங்கை அடி வெளுத்துவிட்டனர். மோர்கனும் மாலனும் காட்டடி அடித்தனர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி இருவருமே அரைசதம் அடித்தனர். 24 பந்துகளில் அரைசதம் அடித்த மோர்கன், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். 

இருவரும் அரைசதம் அடித்த பிறகு, தாறுமாறாக அடித்து ஆடினர். போடும் பந்துகளை எல்லாம் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 16 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் அடித்திருந்தது. 17வது ஓவரில் டேவிட் மாலன், 3 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாசினார். 18வது ஓவரில் மாலன் 2 சிக்ஸர்களை விளாசினார். 19வது ஓவரில் இயன் மோர்கன் தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். 

டேவிட் மாலன் 48 பந்துகளில் சதமடித்து, டி20 கிரிக்கெட்டில் விரைவில் சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். கடைசி ஓவரில் இயன் மோர்கன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மாலன் மற்றும் இயன் மோர்கனின் அதிரடியால் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 241 ரன்களை குவித்தது. டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

இதையடுத்து 242 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் முன்ரோ ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து நம்பிக்கையளித்தனர். ஆனால் அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அவுட்டானதால், நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

கப்டில் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டிம் சேஃபெர்ட், டி கிராண்ட் ஹோம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 30 ரன்களில் முன்ரோவும் ஆட்டமிழந்தார். ரோஸ் டெய்லர், மிட்செல் ஆகியோரும் சோபிக்கவில்லை. ஆனால் 8ம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த கேப்டன் டிம் சௌதி, சிக்ஸர்களாக விளாசி இங்கிலாந்து அணியை அச்சுறுத்தினார். ஆனாலும் 242 ரன்கள் என்பது மெகா இலக்கு என்பதால் அதை நியூசிலாந்து அணி அடிப்பது கடினம் என்பதை உணர்ந்து, நம்பிக்கையுடன் பந்துவீசினர் இங்கிலாந்து பவுலர்கள். 

வெறும் 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களை குவித்த டிம் சௌதியை மேத்யூ பார்கின்சன் வீழ்த்தினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 16.5 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி. இதையடுத்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-2 என தொடரை சமன் செய்தது.