ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-2 என தொடரை சமன் செய்துவிட்டது. 

ஆஷஸ் தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், கடைசி போட்டியில் வென்று தொடரை இழந்துவிடாமல் சமன்செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்கின.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பட்லரின் அதிரடி அரைசதம் மற்றும் ரூட்டின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால், முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மட்டுமே அரைசதம் அடித்தார். ஸ்மித் 80 ரன்களை குவித்து நிலையில், ஆரம்பத்தில் அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய லபுஷேன் 48 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டென்லி 94 ரன்களையும் பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களையும் குவித்தனர். பின்வரிசையில் அதிரடியாக ஆடி பட்லர் 47 ரன்களை விளாச, இரண்டாவது இன்னிங்ஸில் 329 ரன்கள் அடித்தது இங்கிலாந்து அணி. 

மொத்தமாக 398 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 399 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் வழக்கம்போலவே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய பொறுப்பு, மீண்டும் ஸ்மித் - லபுஷேனிடமே வந்தது. அதற்கேற்றவாறு இருவரும் நிதானமாகத்தான் ஆடினார். ஆனாலும் இந்த ஜோடியை நிலைக்கவிடுவது ஆபத்து என்பதை உணர்ந்த இங்கிலாந்து பவுலர்கள் இந்த ஜோடியை பிரித்துவிட்டனர். லபுஷேனை 14 ரன்களில் வீழ்த்தினார் ஜாக் லீச்.

அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தி அந்த அணியின் நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்தார் ஸ்டூவர்ட் பிராட். ஸ்மித் 23 ரன்களில் அவுட்டாக, நம்பிக்கை பெற்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணிக்கு வெற்றி நம்பிக்கை உதித்த நிலையில், அதை தகர்க்கும்விதமாக அபாரமாக ஆடி விரைவாக ரன் குவித்தார் மேத்யூ வேட். அதிரடியாகவும் அதேநேரத்தில் மிகவும் கவனமாகவும் ஆடிய வேட், சதமடித்தார். இதற்கிடையே மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், கம்மின்ஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 

சதமடித்த மேத்யூ வேட், 117 ரன்களில் ஆட்டமிழக்க, அவர் அவுட்டாகிய அடுத்த 2 ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-2 என தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி.

1972ம் ஆண்டுக்கு பிறகு 47 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஆஷஸ் தொடர் சமன் ஆகியுள்ளது.1972க்கு பின் எந்த ஆஷஸ் தொடருமே சமன் ஆனதில்லை. 47 ஆண்டுகளில் இதுதான் முதன்முறை. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஃப்ரா ஆர்ச்சரும் தொடர் நாயகர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.