சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக கிரிக்கெட் தொடர்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடரும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மட்டும் ரத்து செய்யப்படாமல், ரசிகர்கள் இல்லாமல் தொடர்ந்து நடத்தப்பட்டது. நிலைமை ரொம்ப மோசமானதையடுத்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியில் ஆடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஒரு வாரத்திற்கு முன்பே இங்கிலாந்து சென்றடைந்த நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு கொரோனா டெஸ்ட்டுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. 

ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா உறுதி செய்துள்ளார். அவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Also Read - ஒருவேளை ஐபிஎல்லை நடத்தினாலும் இப்படித்தான் நடத்தப்படும்.. முன்னாள் தொடக்க வீரர் அதிரடி

ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் ஆகிய இருவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் கொரோனா இல்லை என்பது டெஸ்ட்டின் முடிவில் தெரியவந்தது. இந்நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.