சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 129 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகிவருவதால், கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. 

பிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. கொரோனா பாதிப்பின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இப்போதைக்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டதாகவே இருக்கட்டும். பின்னர் நிலைமையை கருத்தில்கொண்டு முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பிலும் அணி உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 

ஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம்.

ஐபிஎல் தொடங்க தாமதமானால், ஆனால் நடத்தக்கூடிய சூழல் இருந்தால், வழக்கமான போட்டிகளை விட குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். ஆனால் எத்தனை போட்டிகள் எந்த மாதிரி நடத்தப்படும் என்பதெல்லாம் இப்போதே சொல்லமுடியாது. இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என்னவென்பதை அடுத்து பார்த்துக்கொள்வோம் என்று கங்குலி தெரிவித்திருந்தார். 

Also Read - முன்னாடி போனா முட்டுறது; பின்னாடி வந்தா உதைக்கிறது! அட போங்கப்பா.. கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த முக்கியமான தல

இந்நிலையில், ஐபிஎல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள முன்னாள் தொடக்க வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா,  ஐபிஎல் நடத்தப்படுவது குறித்தும் எப்படி நடத்தப்படும் என்பது குறித்தும் கணிப்பது கஷ்டம். ஏப்ரல் 15ம் தேதி தொடங்குவதே கஷ்டம் தான்.  ஆனால் ஒருவேளை ஐபிஎல் நடத்தப்பட்டால், ஒரேயொரு நகரத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இப்படி நடக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது, நடக்கலாம். ஐபிஎல் குறித்து இப்போதைக்கு கணிப்பதும் கருத்து தெரிவிப்பதும் கஷ்டம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.