வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரின் விக்கெட்டையும் 7வது ஓவரில் இழந்தது. கோட்ரெலின் ஒரே ஓவரில் ராகுலும் கோலியும் முறையே 6 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் ரோஹித்தும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். களத்தில் நன்கு செட்டில் ஆகியிருந்த ரோஹித் சர்மா, 36 ரன்களில் அல்ஸாரி ஜோசப்பின் பந்தில் ஆட்டமிழந்தார். வழக்கமாக புல் ஷாட்டுகளை அபாரமாக ஆடும் ரோஹித் சர்மா, இந்த முறை புல் ஷாட்டை சரியாக தூக்கியடிக்காமல் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 26வது ஓவரின் முடிவில் மைதானத்திற்குள் நாய் ஒன்று புகுந்தது. மைதானத்திற்குள் ஓடிய நாய், பவுண்டரி லைனை கடந்து வெளியே ஓடியது. இதையடுத்து வீரர்கள் மீண்டும் ஆட தயாரான நிலையில், நாய் மீண்டும் மைதானத்திற்குள் வந்தது. பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்த ஹெட்மயர் நாயுடன் விளையாடினார். பின்னர் மைதானம் முழுவதும் ஓடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நாய், மீண்டும் பவுண்டரி லைனை விட்டு வெளியேறியது. 

ஆந்திரா - விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.