Asianet News TamilAsianet News Tamil

கண்ணிமைக்கும் நொடியில் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ்.. தோனியின் அசாத்திய விக்கெட் கீப்பிங் வீடியோ

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே. 
 

dhonis lightening fast stumpings against delhi capitals
Author
Chennai, First Published May 2, 2019, 9:40 AM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே. 

நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது. 

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் இணைந்து சரித்துவிட்டனர். சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங் மற்றும் தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பிங்கால் டெல்லி அணி வெறும் 99 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 

dhonis lightening fast stumpings against delhi capitals

180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதத்தை நெருங்கினார். 83 ரன்களுக்கே டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருடன் கிறிஸ் மோரிஸ் ஜோடி சேர்ந்தார். எனினும் கிறிஸ் மோரிஸ் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்தார். 

ஜடேஜா வீசிய 12வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட மோரிஸ், பந்தை அடிக்க முயலும்போது பேலன்ஸ் மிஸ்ஸாகி காலை சற்று தூக்கிவிட்டு கீழேவைத்தார். ஆனால் அவரது கால் கிரீஸை விட்டு வெளியே வரவில்லை. கிரீஸுக்குள்ளேயே தான் இருந்தது. எனினும் பேலன்ஸ் மிஸ்ஸாகி தூக்கிவிட்டு மீண்டும் வைக்கும் இடைவெளியில் கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்தார் தோனி. இதையடுத்து மோரிஸ் கோல்டன் டக்காகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்தில் மோரிஸ் அவுட்டானதை போலவே ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட்டானார். ஷ்ரேயாஸும் காலை தூக்கி வைக்கும் நொடிப்பொழுதில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார் தோனி. அந்த வீடியோ இதோ.. 

ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கும்வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையையும் 12வது ஓவரிலேயே சிதைத்து சிஎஸ்கே அணியின் அபார வெற்றியை உறுதி செய்தார் தோனி. அதன்பின்னர் அந்த அணி அடுத்த 2 விக்கெட்டுகளையும் விரைவில் இழந்துவிட சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios