பஞ்சாப் கிங்ஸ் வீரர் பானுகா ராஜபக்சாவை தோனி ரன் அவுட் செய்த சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஐபிஎல் 15வது சீசன் சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி, இந்த சீசனில் ஆடிய முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் புதிய கேப்டனான ரவீந்திர ஜடேஜா கேப்டன்சியில் ஆடும் சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த போட்டியில் தோனி பானுகா ராஜபக்சாவை ரன் அவுட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தோனி மின்னல் வேக ஸ்டம்பிங், அதிவேக ரன் அவுட் ஆகியவற்றிற்கு பெயர்போனவர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் நிலையில், 40 வயதிலும் அதிவேகமாக ஓடிவந்து ரன் அவுட் செய்து மிரட்டினார்.
பஞ்சாப் அணி இன்னிங்ஸின்போது கிறிஸ் ஜோர்டான் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தை அடித்துவிட்டு ராஜபக்சா ரன் ஓடினார். தவானும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஓட ஆரம்பித்தார். ஆனால் பவுலர் கிறிஸ் ஜோர்டான் வேகமாக ஓடி பந்தை எடுக்க, தவான் பின் வாங்கினார். ஆனால் பாதி பிட்ச் வரை ஓடிவந்த ராஜபக்சா திரும்பி க்ரீஸுக்கு ஓடுவது கடினம் என்ற நிலையில், கிறிஸ் ஜோர்டான் பந்தை பிடித்ததையடுத்து, விக்கெட் கீப்பிங் பொசிசனில் இருந்த தோனி வேகமாக ஓடிவந்து ஜோர்டான் அடித்த த்ரோவை பிடித்து ரன் அவுட் செய்தார்.
கிறிஸ் ஜோர்டான் பந்தை பிடித்த பின்னர், ராஜபக்சாவும் தோனியும், ஸ்டம்ப்புக்கு எதிரெதிர் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தொலைவிலிருந்து ஓட ஆரம்பித்தனர். ராஜபக்சா விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளவும், தோனி ரன் அவுட் செய்வதற்காகவும் வேகமாக ஓடிவந்தனர். அதில் தோனியை ராஜபக்சாவால் அடித்துக்கொள்ள முடியவில்லை. அதிவேகமாக ஓடிவந்து பந்தை பிடித்து ஜம்ப் செய்து ஸ்டம்ப்பை அடித்தார் தோனி. 40 வயதிலும் தோனி செய்த மின்னல் வேக ரன் அவுட்டை பார்த்து, ரசிகர்கள் தோனிக்கு வயது வெறும் நம்பர் தான் என்று விதந்தோதிவருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
