உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து சிந்தக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்த தகவல் வெளியானது. இந்திய அணிக்கு இனிமேல் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். தோனி 15 பேர் கொண்ட அணியில் வேண்டுமானால் இருப்பார். ஆனால் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பேயில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளிவந்தது. 

இதன்மூலம் தோனி அவரது ஓய்வு முடிவை அவரே அறிவிக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ நெருக்கடி கொடுப்பது தெரிகிறது. ஆனால் தோனி இதற்கெல்லாம் மசியவேயில்லை. இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து பேசிய கவுதம் கம்பீர், தோனி கண்டிப்பாக 2021-2022 வரை ஓய்வு பெறமாட்டார். ஏனெனில் அவரது வணிக ஒப்பந்தங்கள் பல 2022ம் ஆண்டுவரை இருக்கலாம். அதனால் அதுவரை அவர் அணியில் ஆடவே செய்வார். அவராக ஓய்வு அறிவிப்பதெல்லாம் நடக்காத காரியம். அவரை உட்கார வேண்டுமானால் வைக்கலாம். அவர் ஓய்வு அறிவித்தால் அது அவரது வணிக நலன்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அவர் கண்டிப்பாக ஓய்வு பெறமாட்டார் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தோனிக்கு இப்போதைக்கு ஓய்வு பெறும் ஐடியா இல்லை என்று அவரது நெருங்கிய மற்றும் நீண்டகால நண்பரான அருண் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார். தோனி ஒரு சிறந்த வீரர்; அவரது ஓய்வு குறித்த யூகங்களும் விவாதங்களும் துரதிர்ஷ்டமானது என்று தெரிவித்துள்ளார். 

தோனி 2018ம் ஆண்டு பாரத் மேட்ரிமோனி, மாஸ்டர் கார்டு, ரியால்டி ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸ், சவுண்ட் லாஜிக், வார்ட்விஸ், ட்ரீம் லெவன் ஃபாண்டசி ஸ்போர்ட்ஸ், இண்டிகோ பெயிண்ட்ஸ், கோ டாடி, லிவ்ஃபாஸ்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தார். 2019ம் ஆண்டில் ரெட்பஸ், கோல்கேட், கோககோலாவின் ஸ்போர்ட்ஸ் பானம் பவரேட், எஸ்.ஆர்.எம்.பி. ஸ்டீல் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கெல்லாம் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தான் தோனி நினைப்பார். தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரது பிராண்ட் மதிப்பு குறைந்தது. அண்மைக்காலமாகத்தான் நிறைய நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதால் அவர் ஓய்வு பெறமாட்டார். இதைத்தான் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதைக்கு தோனிக்கு ஓய்வு பெறும் ஐடியாவே இல்லை என்று தோனியின் நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.