ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்று முடிவடைய போகிறது. இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி கேபிடள்ஸ் அணி, முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த சீசனில் களமிறங்கியது. பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில், அதுபோதாதென்று கங்குலியை ஆலோசகராக நியமித்தது அந்த அணி நிர்வாகம். 

பாண்டிங் - கங்குலி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் வழிகாட்டுதலின் படி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி, அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது. 16 புள்ளிகளுடன் டெல்லி கேபிடள்ஸ் அணி முதலிடத்திலும் சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருந்தன. 

லீக் சுற்று முடியும்போது முதலிரண்டு இடங்களில் இடம்பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள டெல்லி அணி, நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 179 ரன்களை குவித்தது. 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, வெறும் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் டாஸ் வென்றார். டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என கண்டிப்பாக பயிற்சியாளர் குழு மற்றும் ஆலோசகர் ஆகியோருடன் ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரண்டாவது பேட்டிங்கின்போது பனிப்பொழிவு இருக்கும். எனவே அது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றார் ஷ்ரேயாஸ். 

ஷ்ரேயாஸுக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். ஏனெனில் மேகக்கூட்டம் அதிகமாக இருப்பதால் பனிப்பொழிவு பெரிதாக இருக்காது. எனவே நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் கண்டிப்பாக பேட்டிங்தான் செய்திருப்போம் என்றார். 

அதேபோலவே பனிப்பொழிவு பெரிதாக இல்லை. எனவே பாண்டிங்-கங்குலி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்தாலும் கிரிக்கெட்டை பொறுத்தவரை சூழல், ஆட்டத்தின் போக்கு ஆகியவற்றை சரியாக கணிப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான்.