உலக கோப்பை தொடரில் இன்று நடந்துவரும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியுடன் ஆடிவரும் இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் இந்திய அணியின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களான ஷமி மற்றும் பும்ராவின் பவுலிங்கை தொடக்கம் முதலே நிதானமாக எதிர்கொண்டு சிறப்பாக ஆடிவருகின்றனர். இருவரின் பவுலிங்கையுமே ராயும் பேர்ஸ்டோவும் எதிர்கொள்ள திணறினர். ராய் தெளிவான சில ஷாட்டுகளை ஆட, பேர்ஸ்டோவிற்கு ஷமியின் பந்தில் இன்சைட் எட்ஜாகி 2 பவுண்டரிகள் கிடைத்தது. 

ஷமி மற்றும் பும்ராவின் வேகத்தை இருவராலும் திறம்பட எதிர்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, சமாளித்து ஆடினர். இருவராலும் விக்கெட் எடுக்க முடியாததை அடுத்து வழக்கத்திற்கு மாறாக ஆறாவது ஓவரிலேயே சாஹலை கொண்டுவந்தார் கேப்டன் கோலி. ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. சாஹலின் பவுலிங்கை ராயும் பேர்ஸ்டோவும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 

முதல் விக்கெட்டையே இந்திய பவுலர்களால் போட முடியாத நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய 11வது ஓவரில் ராயை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரிவியூ எடுக்காமல் இந்திய அணி அந்த வாய்ப்பை தவறவிட்டது. 11வது ஓவரை தனது முதல் ஓவராக வீசினார் ஹர்திக். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை லெக் திசையில் நல்ல லெந்த்தில் வீசினார். அந்த பந்து ராயின் பேட்டை உரசியபடி கீப்பர் தோனியிடம் சென்றது. அதை கேட்ச் பிடித்த தோனி, பந்துவீசிய ஹர்திக் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் அம்பயரிடம் அப்பீல் செய்ய, அம்பயரோ வைடு கொடுத்தார். 

அந்த பந்து ராயை கடந்து செல்லும்போது ஒரு சத்தம் கேட்டது. எனவே விக்கெட்டாக இருக்கலாம் என்பதில் ஹர்திக் மற்றும் கேப்டன் கோலி சற்று உறுதியாக இருந்தனர். ஆனால் ரிவியூவிற்கே பெயர்போன தோனியிடம் தான் இறுதி முடிவு வழக்கமாக கேட்கப்படும். அதேபோலவே தோனியிடம் கோலி கேட்டார். டி.ஆர்.எஸ் என்றால் தோனி ரிவியூ சிஸ்டம் என்று சொல்லுமளவிற்கு துல்லியமாக ரிவியூ கேட்பதற்கு பெயர்போன தோனி இந்த முறை தவறாக சொல்லிவிட்டார். இது அவ்வளவு உறுதியாக தெரியாததால், ஒருவேளை அவுட் இல்லை என்றால் ரிவியூவை முன்கூட்டியே இழக்க நேரிடும் என்பதால் ரிவியூ எடுக்க வேண்டாம் என்று தோனி சொல்லிவிட்டார். ஆனால் ரீப்ளேவில் அது அவுட்டுதான் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் தோனி வேண்டாம் என்று சொல்லியதால் கோலி ரிவியூ எடுக்கவில்லை. 

அது அவுட்டுதான் என்பது ராய்க்கு தெரிந்திருக்கும் அல்லவா.. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த ராய், அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசினார். அதன்பின்னர் ராய் முன்பைவிட அதிரடியாக ஆட தொடங்கினார். ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கிய பேர்ஸ்டோவும் அடித்து ஆட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பேர்ஸ்டோ அரைசதம் அடிக்க, 16வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது இங்கிலாந்து அணி. பேர்ஸ்டோவை தொடர்ந்து ராயும் அரைசதம் அடித்தார். இருவருமே இந்திய பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடிவருகின்றனர். 

முதல் விக்கெட்டையே போட முடியாமல் இந்திய அணி திணறிவருகிறது. ஆனால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களோ தாறுமாறாக அடித்து ஆடிவருகின்றனர்.