ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா, தோனி, கோலி ஆகிய மூவருமே ஒவ்வொரு மைல்கல்லை எட்ட காத்திருக்கின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தலா 103 சிக்ஸர்களுடன் கெய்லும் கப்டிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

இவர்களுக்கு அடுத்த இடத்தில் 102 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா உள்ளார். இன்றைய போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்தால் முதலிடத்தை பிடித்து விடுவார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா முதலிடத்தை பிடிக்க காத்திருக்கும் அதேவேளையில், 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்ட தோனியும் கோலியும் காத்திருக்கின்றனர்.

இதுவரை 84 இன்னிங்ஸ்களில் ஆடி 49 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி. 61 இன்னிங்ஸ்களில் ஆடி 48 சிக்ஸர்களை அடித்துள்ளார் கோலி. இன்றைய போட்டியில் தோனி ஒரு சிக்ஸர் மற்றும் கோலி இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் இருவரும் 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவர். 

சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்திலும் யுவராஜ் சிங் இரண்டாவது இடத்திலும் சுரேஷ் ரெய்னா மூன்றாமிடத்திலும் உள்ளனர். நான்காம் மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே தோனி மற்றும் கோலி உள்ளனர்.